தலைமை ஏற்கும் உதயநிதி ஸ்டாலின்- தீவிர அரசியலில் இறங்கத் திட்டமா?

நடிகரும், தயாரிப்பாளரும், முரசொலி பத்திரிகை நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநருமான உதயநிதி ஸ்டாலின் திமுக நிகழ்ச்சி ஒன்றில் கட்சிக் கொடியை முதன்முறையாக ஏற்றி தலைமை தாங்க உள்ளார்.

கடந்த சில காலமாக உதயநிதி ஸ்டாலின், தொடர்ச்சியாக திமுக-வின் போராட்டங்கள் மற்றும் கூட்டங்களில் பங்கெடுத்து வருகிறார். தற்போது உதயநிதி ஸ்டாலின், தீவிர அரசியலில் இறங்கப் போவதற்கான முன்னெடுப்பாகக் கட்சி விழாவில் கட்சிக் கொடியை முதன்முறையாக ஏற்ற உள்ளார் எனக் கூறப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் வரும் 15 ஆம் தேதி, திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, உதயநிதி 7 இடங்களில் திமுக கட்சிக் கொடி ஏற்ற உள்ளார். இது குறித்து முரசொலி நாளிதழில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிக் கொடி ஏற்றிய பின்னர் திமுக தொண்டர்கள் மத்தியில் உதயநிதி சிறப்புரை ஆற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவர் இப்படி, கொடி ஏற்றலாமா? என்ற கேள்வி திமுக-வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், ‘கட்சிப் பதவியில் இல்லாத பலரும் கொடி ஏற்றியுள்ள நிகழ்ச்சிகள் பல நடந்துள்ளன. கட்சி உறுப்பினராகவோ அல்லது கட்சியின் கொள்கைகளில் உடன்பாடு இருந்தோலோ கொடி ஏற்ற முடியும். அது மட்டுமல்லாமல் உதயநிதி தொடர்ச்சியாக திமுக-வின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். எனவே, அவர் கொடி ஏற்றுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது' என மூத்த நிர்வாகிகள் விழா ஏற்பாடை கவனிக்கத் தொடங்கிவிட்டனர்.

More News >>