சிக்கலில் நிரவ் மோடி வாடிக்கையாளர்கள்- பாய்ந்தது புகார்!
பஞ்சாப் தேசிய வங்கியிடமிருந்து 13,400 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் நிரவ் மோடியை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் தேடப்பட்டு வருகிறார்.
இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து நிரவ் மோடியை தொடர்ந்து தேடி வருகிறது இந்தியா. இந்நிலையில், நிரவ் மோடிக்குச் சொந்தமான நிறுவனங்களிடமிருந்து நகை வாங்கிய 50 பணக்கார வாடிக்கையாளர்கள், வருமான வரி தாக்கல் செய்த போது ஒரு முறைகேடு குறித்து கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, வாங்கிய நகைகளுக்கு அவர்கள் ஒரு பகுதியை செக் மூலம் செலுத்திவிட்டு வரி கட்டியுள்ளனர்.
மீதம் உள்ளத் தொகையை பணமாக செலுத்தி அதை மறைத்துள்ளனர். நிரவ் மோடி நிறுவனங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் நகை விற்றதற்கு எவ்வளவு பணம் நேரடியாக பெறப்பட்டது மற்றும் எவ்வளவு பணம் செக் ஆக பெறப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் இருந்துள்ளது.
அதனுடன், வாடிக்கையாளர்களின் வரி தாக்கலை கணக்கிட்டுப் பார்த்த போது தான், இந்த வரி ஏய்ப்பு குறித்து தெரியவந்துள்ளதாம். இந்நிலையில், ஒருவேளை வரி ஏய்ப்பு புகார் நிரூபிக்கப்பட்டால், 50 பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித் துறைக்கு நெருக்கமான வட்டாரம் எனத் தகவல் தெரிவித்துள்ளது.