பிரதமரை எங்கள் கூட்டணி தீர்மானிக்கும் - டி.டி.வி. தினகரன்

பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக எங்களது கூட்டணி இருக்கும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “மக்கள் விரோத ஊழல் நிறைந்த இந்த ஆட்சியில், நடந்த முறைகேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வரும். நிச்சயமாக ஆட்சிக்கு முடிவுக்கு வரும்” என்றார்.

“கல்வி தொடர்பான மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காது. 7 அல்லது 8 மாதங்களில் தேர்தல் வர போகிறது. மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் யார் பிரதமர் என்பதை தமிழக எம்.பி.க்கள் தீர்மானிக்க போகிறார்கள்." எனக் கூறினார்.

“தமிழகத்திற்குத் தேவையில்லாததை மக்கள் ஏற்கமாட்டார்கள். நல்ல அரசாங்கம் அமைக்க தமிழக மக்கள் வாக்களிப்பார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். இந்த வழக்கில் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும்.” என தினகரன் தெரிவித்தார்.

“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். எங்கள் கூட்டணிதான் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்." என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“பாஜகவினர் தமிழக அரசை பற்றி என்ன விமர்சனம் செய்தாலும் பதில் சொல்லமாட்டார்கள். அவர்கள்தான் மத்திய அரசுக்கு சேவகர்களாக இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்திற்கும் சட்டமன்ற தேர்தல் வரும்." எனவும் தினகரன் குறிப்பிட்டார்.

"அப்போது ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்து அவர் அறிவித்த திட்டங்களை நாங்கள் நிறைவேற்றுவோம். முட்டை ஊழல் உள்பட முறைகேடுகளில் சட்டம் தன் கடமையை தானாக செய்யும். தமிழகத்தில் ஊழல் அதிகாரித்துவிட்டது என அமித் ஷா சொன்னால்தான் ஏற்பீர்களா. சாமானியர்களுக்கும் இது தெரியும்." என அவர் விமர்சித்தார்.

More News >>