வாரணாசியில் வளர்ச்சியை கொண்டு வந்தது நாங்கள்தான்! - மோடி

சொந்தத் தொகுதியான வாரணாசிக்கு இன்று சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார்.

அப்போது, ‘பாஜக இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தான், வாரணாசியில் வளர்ச்சி வந்தது’ என்று பெருமிதத்தோடு பேசினார். அவர் மேலும், ‘முன்னர் இந்தத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் எந்தவித வளர்ச்சியும் வரவில்லை.

பாஜக வந்த பின்னர் தான் வளர்ச்சி வாரணாசிக்கு வந்தது. புதிய இந்தியாவுக்கு புதிய வாரணாசி உருவாக்கப்பட்டு வருகிறது. வாரணாசியின் உடல் நவீனத்துவம் அடையும். ஆனால் ஆன்மா பழைமையானதாக இருக்கும். வாரணாசியின் ஒவ்வொரு மூலையிலும் கலாசாரம் ‘ஸ்மார்ட்’ தன்மையுடன் கொப்பளிக்கும். இதுவரை 21,000 கோடி ரூபாயில் 200 திட்டங்கள் கங்கை நதியை சுத்தமாக வைத்திருப்பதற்காக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நகரத்தின் குப்பைகள் கங்கை நதியில் கலக்காத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நான் பல உலகத் தலைவர்களை சந்திக்கும் போதும், வாரணாசியின் பெருமை குறித்து பேசுவர். அவ்வளவு மேன்மை பெற்றது இதற் கலாசாரம்’ என்றார் பூரிப்புடன்.

இந்தப் பயணத்தின் போது மோடி, 900 கோடி ரூபாய் மதிப்பில் பல திட்டங்களை வாரணாசியில் தொடங்கி வைத்தார்.

More News >>