துவரம் பருப்பு கொள்முதலில் ஊழல் - புகழேந்தி குற்றச்சாட்டு
By Radha
தமிழக அரசின் துவரம் பருப்பு கொள்முதலில் ஒவ்வொரு மாதமும் 360 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முட்டை ஊழலை அடுத்து பருப்பு ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறினார்.
ஊழல் செய்யும் ஆயுதமாக கிறிஸ்டி நிறுவனம் உள்ளதாகவும் இந்த நிறுவனத்தை தவிர வேறு நிறுவனத்துக்கு அமைச்சர் காமராஜ் டெண்டர் வழங்குவதில்லை எனவும் கூறினார்.
குறைவான விலைக்கு பருப்பு வழங்க பல நிறுவனங்கள் முன்வந்தும் டெண்டர் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர் துவரம் பருப்பு கொள்முதலில் ஒவ்வொரு மாதமும் 360 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 18 மாதங்களாக இந்த ஊழல் நடைபெற்று வருகிறது என்ற அவர் பருப்பு ஆன்லைன் டெண்டர் ஏன் விடவில்லை என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் நடைபெறும் ஊழல் குறித்து அமித் ஷாவிற்கு தாமதமாக தெரிய வந்துள்ளதாகவும் ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் ஊழல் குறித்து விரைவில் ஆதாரத்துடன் நிரூபிப்பேன் எனவும் புகழேந்தி தெரிவித்தார்.