தங்கம் வென்ற ஹிமா தாசுக்கு ரூ.50 லட்சம் பரிசு அறிவிப்பு
உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்ற ஹிமா தாசுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்குவதாக அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.
உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பின்லாந்தில் நடைபெற்றது. இதில், 20 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கணைகள் கலந்துக் கொண்டனர். இந்த போட்டியில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இந்தியா வீராங்கனை ஹிமா தாஸ் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹிமா தாசின் வெற்றி, இந்தியாவிற்கே பெரும் புகழை தேடித் தந்துள்ளது. மேலும், ஹிமா தாசுக்கு சொந்த ஊரான திங் கிராமமே உற்சாகமடைந்துள்ளது.
தங்கம் வென்ற வீராங்கனை ஹிமா தாசுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலர் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாசுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது.