நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் ரெய்டு

அருப்புக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.பி.கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

எஸ்.பி.கே கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் நாகராஜ் செய்யாதுரை வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் அபிராமபுரம், அண்ணாநகர், போயஸ்தோட்டம் உள்பட 5 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

சென்னையில் அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை, தற்போது வரை நீடிக்கிறது. இதுவரை நடந்த சோதனையில் கணக்கில் வராத 80 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், அருப்புக்கோட்டையில் உள்ள நாகராஜ் செய்யாதுரையின் வீடு, அலுவலகங்கள், மற்றும் அவருக்கு சொந்தமான மில், கல்குவாரிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

6 வாகனங்களில் வந்த 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.பி.கே நிறுவனம் நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்டு, பல பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சத்துணவு திட்டத்துக்கான பொருட்களை விநியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனம், அக்னி குழும நிறுவனங்கள் உள்பட 4 நிறுவனங்கள் 5 நாட்களாக 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் தனியார் சத்துமாவு நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்ததை வருமானவரித்துறை கண்டுபிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>