6 துறையைச் சார்ந்த நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி

நிதி, நெடுஞ்சாலை, உள்ளாட்சி, பால்வளம் உள்பட 6 துறைகள் சார்ந்த நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், முகலிவாக்கம் - சந்தோஷ் நகரில் 85 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை அவர் திறந்து வைத்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 102 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 13 பூங்காக்கள், 2 மேம்படுத்தப்பட்ட சிறுவர் விளையாட்டு மைதானங்கள், வார்டு மற்றும் பகுதி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 2 பாதாள சாக்கடை திட்டங்கள் ஆகியவற்றை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட சூரப்பட்டு பகுதியில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டம்; புத்தகரம் மற்றும் கதிர்வேடு ஆகிய பகுதிகளில் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டம்.

நிதித்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் - ஆவடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் - பொன்னமராவதி ஆகிய இடங்களில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு சார் கருவூல அலுவலகக் கட்டடங்கள்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூரில் 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம்.

மேலும், கடலூர், திருச்சிராப்பள்ளி, தருமபுரி, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 137 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 ஆற்றுப்பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள் என 6 துறையை சார்ந்த நலத்திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

More News >>