ரவுடி ஆனந்தன் படத்துக்கு அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி
சென்னையில், என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்த் உருவ படத்திற்கு அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி செலுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் ரவுடிகள் தகராறு செய்வதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற முதல்நிலைக் காவலர் ராஜவேலு கடுமையாக தாக்கப்பட்டார்.
சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வெட்டியதில் தலை உள்பட 16 இடங்களில் காயமடைந்த ராஜவேலுக்கு, ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ரவுடி ஆனந்தனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தரமணி பகுதியில் ஆனந்தன் உள்ளிட்டோர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து, உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை காவலர்கள் அப்பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது, ஆனந்தன் மீண்டும் போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், உதவி ஆணையர் துப்பாக்கியால் சுட்டதால் ரவுடி ஆனந்தன் அங்கேயே இறந்தான்.
இறந்த ரவுடி ஆனந்தன் மீது, கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ரவுடி ஆனந்தன் இல்லத்தில் 16-ஆம் நாள் காரிய நிகழ்ச்சி நடந்தது.
அதில் கலந்து கொண்ட, விருகம்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ரவி, ஆனந்தன் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன், ரவுடி ஆனந்த் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதிமுக எம்.எல்.ஏ ரவியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.