கூட்டுறவு சங்க தேர்தல் விவரங்கள்.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக அனைத்து விவரங்களையும் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், இறந்த உறுப்பினர்களின் பெயர்கள் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது, வேட்பாளர்களின் வேட்புமனுக்களை முறையாக பரிசீலிக்காமல் நிராகரிக்கப்பட்டது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
முதல் கட்டத் தேர்தலில் 4 ஆயிரத்து 600 கூட்டுறவு சங்க தேர்தல்களில் 300 சங்கங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது. மற்ற சங்கங்களுக்கு தேர்தலே நடத்தாமல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த முறைகேடுகளை தவிர்க்க வாக்களார் பட்டியல், உறுப்பினர்கள் விவரங்கள், நிராகரித்த வேட்பாளர்கள் மற்றும் ஏற்கப்பட்ட வேட்பாளர்களின் விவரங்கள் ஆகியவற்றை இணையதளத்தில் வெளியிடும்படி, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரை சேர்ந்த அண்ணாமலை என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி ஆஷா அடங்கிய அமர்வு, கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும் அந்த ஆணைய இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டனர்.