பெரியபாண்டியனை சுட்டது தமிழக போலிஸ் தானா? - அதிர்ச்சித் தகவல்
மறைந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது அவருடன் இணைந்து பணியாற்றிய மற்றொரு காவல் ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என ராஜஸ்தான் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை கொளத்தூரில் உள்ள நகை கடையில் துளைபோட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மற்றும் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் ராஜஸ்தான் சென்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ராமாவாஸ் கிராமத்தில் கொள்ளை கும்பல் தலைவன் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க சென்றபோது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மீது பாய்ந்த குண்டு கொள்ளையர்கள் துப்பாக்கியில் இருந்து பாய்ந்ததுதானா என்ற சந்தேகம் ராஜஸ்தான் மாநில காவல் துறையினருக்கு இருந்தது.
இந்நிலையில் இன்று காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கிக் குண்டு என ராஜஸ்தான் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து ராஜஸ்தான் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.