24 மணி நேரமும் கை விலங்கு- அமெரிக்க சட்டவிரோத குடியேறிகள் பரிதாபம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், ஃபெடரல் சிறைச் சாலைகளில் 24 மணி நேரமும் கை விலங்குடன் உள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன், மற்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்பவர்கள் விவகாரத்தில் ‘ஸீரோ டாலரென்ஸ்’ காட்டப்படும் என்று கூறினார். இதன் மூலம் சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களை எல்லையிலேயே மடக்கி, அவர்களை சிறையில் அடைக்கும் கொடுமை நடந்து வருகிறது.

இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதைப் போன்று, அமெரிக்காவில் இருக்கும் ஓரிகன் மாகாண ஃபெடரல் சிறையில் வாடி வருகின்றனர். அவர்கள் எண்ணிலடங்கா துயரங்களை அனுபவித்து வருவதாக அங்கிருக்கும் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியர்களில் பெரும்பாலானோர் சீக்கியர்களாக இருப்பதாக தெரிகிறது. அவர்கள் அனைவரும், சொந்த நாட்டில் மத ரீதியிலான அச்சுறுத்தல் காரணமாகவோ அரசியல் அச்சுறுத்தல் காரணமாகவோ வெளியேறி, அமெரிக்காவில் தஞ்சம் புக வேண்டி வந்துள்ளனர்.

ஆனால், தற்சமயம் அவர்கள் அனைவரும் கூட்டாக சிறையில் அடைக்கப்பட்டு கைதிகளைவிட மோசமான நிலையில் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்தியர்களை நேரில் சென்று பார்த்த கம்யூனிட்டி கல்லூரி பேராசிரியை நவ்னீத் கௌர், ‘சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் நிலையைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக உள்ளது. அவர்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஒரு நாட்டிலிருந்து வெளியேறி இன்னொரு நாட்டில் குடிபெயர அனுமதி கேட்டுள்ளனர். சட்டப்படி அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டும். ஆனால், குற்றவாளிகளைவிட மோசமான நிலையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

24 மணி நேரமும் அவர்களுக்கு கை விலங்கு போடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கை விலங்குடன் தான் உணவு அருந்துகிறார்கள். மிகவும் கீழ்த்தரமான நிலையில் அவர்கள் நடத்தப்பட்டு வருகின்றனர்' எனக் கூறியுள்ளார்.

More News >>