தற்கொலை தீர்வாகாது!- தற்கொலை வழக்குகளால் நொந்த உயர் நீதிமன்றம்
'மக்கள் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க ஒரு நாளும் தற்கொலை என்னும் முடிவைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. அரசு, அதிகாரம் என கவனம் பெறவே மக்கள் தற்கொலைப் படலத்தை ஏற்கின்றனர்' எஅ உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது.
வேளாங்கண்ணியைச் சேர்ந்த ஜி.ராஜ்குமார் என்பவர் பல மாதங்களாக தனக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி அரசு தரப்பிடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளார். ஆனால், அவரின் கோரிக்கை தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததையடுத்து, தற்கொலை முயற்சி மேற்கொண்டார். மேலும், ‘நில அபகரிப்பை நீக்குமாறு’ சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு நான் இது தொடர்பாக புகார் தெரிவித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதால், சட்டப்பேரவைக்கு புகார் கொடுக்க வந்தேன். ஆனால், என்னை உள்ளே அனுமதிக்கவே மறுத்தனர். அதனால் தான் நான் விஷம் குடித்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் மனு கொடுத்தேன். அப்போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே தான் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளேன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மனுதாரரின் வாதத்தைக் கேட்ட பிறகு நீதிமன்றம், ‘தற்கொலைக்கு முயற்சி செய்த காரணத்திற்காக, யார் மேலாவது வழக்கு தொடரப்பட்டுள்ளதா? ஏனென்றால் சட்டப்படி, தற்கொலைக்கு முயல்வது என்பது குற்றமாகும். ஊடகங்களில் வரும் பெரும்பாலான செய்திகளை வைத்துப் பார்க்கும் போது, இதைப் போன்ற தற்கொலை நடவடிக்கைகள் அதிகார மையத்தின் கவனத்தை ஈர்க்கவே செய்யப்படுகின்றன என்பது தெரிகிறது' எனக் குறிப்பிடப்பட்டது.