நிஜ துப்பாக்கி பயிற்சி: நடிகர் கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை
கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமைய்யா, நடித்து 2012ல் வெளிவந்த திரைப்படம் கழுகு. நல்ல வரவேற்பை பெற்ற படம். தற்போது கழுகு-2 என்ற பெயரில் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கேரளாவில் துவங்கியது. சத்யசிவா இயக்கி வரும் இப்படம் அடர்ந்த காட்டு பகுதியில் உருவாகி வருகிறது. படப்பிடிப்பின் போது திடீரென நடிகர் கிருஷ்ணாவை அதிரடி படையினர் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்தனர்.
கேரளா மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் கிருஷ்ணா செந்நாய்களை வேட்டையாடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. மேலே பறந்தபடி செந்நாய்களை சுடும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அதற்கான துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார் நடிகர் கிருஷ்ணா. தொடர்ந்து ஓரே இடத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதால் அருகில் உள்ள மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் அங்கு சென்ற அதிரடிப்படையினர் துப்பாக்கி முனையில் கிருஷ்ணா அவரின் உதவியாளர் என அனைவரையும் சுற்றி வளைத்தனர். பின்னர் அங்கு நடப்பது திரைப்படம் ஷூட்டிங் என தெரிந்ததும் அவர்களிடம் இருந்த ஒரிஜினல் துப்பாக்கியை மட்டும் பறிமுதல் செய்து வந்துள்ளனர்.
துப்பாக்கிக்கான லைசென்ஸ்-ஐ கொண்டு வந்து காண்பித்து துப்பாக்கியை பெற்றுக்கொள்ளுமாறு கூறி சென்றனர்.
கேரளாவை சுற்றி அவ்வப்போது பயிற்சி எடுத்துவரும் மாவோயிஸ்டுகளை அதிரடிப்படையினரால் கைது செய்யப்படுவது வழக்கம். இதன் காரணமாகவே கிருஷ்ணாவையும் அவரின் உதவியாளரையும் நிஜ மாவோயிஸ்ட் என தவறாக எண்ணி அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.