முதன்முறையாக திருநங்கைகளுக்கான இலக்கியக் கூட்டம்- சாகித்ய அகாடமி
சாகித்ய அகடெமி முதன்முறையாக திருநங்கைகளுக்கான இலக்கியக் கூட்டத்தை கொல்கத்தாவில் நடத்த உள்ளது.
சாகித்ய அகாடெமி நாடு முழுவதும் இலக்கியவாதிகள் பங்குபெறும் பல இலக்கியக் கூட்டங்களை நடத்துவது உண்டு. இலக்கியவாதிகளையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவில் விருதுகள் வழங்கி இலக்கியவாதிகள் கவுரவப்படுத்தப்படுவதும் வழக்கம்.
இந்த வகையில் முதன்முறையாக சாகித்ய அகாடெமி இலக்கியக் கூட்டம் திருநங்கைகள் தலைமையில் நடைபெற உள்ளது. திறமையானவர்களுக்கும், இல்லக்கியவாதிகளுக்கும் தங்கள் திறனை வெளிப்படுத்த மேடை வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தான் திருநங்கைகள் பங்குபெறும் இலக்கியக் கூட்டத்தை நடத்துவதாக சாகித்ய அகாடெம் நிர்வாகக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருநங்கைகளில் மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள், பேராசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பாளர்களாக யார் வேண்டுமானலும் பங்கு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் கொல்கத்தாவில் முதன்முறையாக நடைபெற உள்ள இந்நிகழ்வில் இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வரும் மொழி ஆலோசகருமான மனாபி பந்தோத்பாயாய் தலைமை ஏற்கிறார்.