முதல் விக்கெட் வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்!- காம்ப்ளி நெகிழ்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தனது முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
இது குறித்து சச்சினின் நீண்ட கால நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளி உருக்கத்துடன் ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். இலங்கைக்கு பயணம் செய்துள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில், அர்ஜுன் இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பயணத்தின் போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இன்று முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி சார்பில் அர்ஜுன் பௌலிங் செய்தார். அப்போது, அவர் ஒரு விக்கெட் எடுக்க, சர்வதேச அரங்கில் அவர் எடுக்கும் முதல் விக்கெட்டாக அது பதிவானது.
இது குறித்து வினாத் காம்ப்ளி ட்விட்டரில், ‘அர்ஜுன் விக்கெட் எடுப்பதைப் பார்த்த போது என் கண்ணில்லிருந்து கண்ணீர் வழிந்தது. பல காலம் நீ செலுத்திய கடும் உழைப்பின் பலனாக இந்த வெற்றியை அனுபவித்துள்ளாய். உனக்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் அர்ஜுன்.
இது வெறும் ஆரம்பம் தான். இன்னும் இன்னும் நிறைய வெற்றிகளை குவிப்பதற்கு வாழ்த்துகள். உன் முதல் விக்கெட்டை எடுத்த கணத்தை கொண்டாடி மகிழு’ என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.