பெட்ரோல் - டீசல் விலை உயரும்? - வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
கச்சா எண்ணெய் விலை அதி கரித்துக் கொண்டே வருவதால், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 38.99 டாலர் என்ற அளவிற்கு சரிந்தது. அமெரிக்கச் சந்தைக்குப் போட்டியாக வளைகுடா நாடுகள் கச்சா எண்ணெய்யை அதிகளவில் உற்பத்தி செய்து வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வந்தததால் கடந்த 2 ஆண்டுகளாக, கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வந்ததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, எந்தளவிற்கு விலை சரிந்ததோ, அதை விட இரண்டு மடங்கு பெட் ரோல் - டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டது.
பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விதிப்பின் மூலம் மட்டும், கடந்த ஆண்டு ரூ. 3 லட்சத்து 34 ஆயிரத்து 534 கோடியை மோடி அரசு ஈட்டியது.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூன் - ஜூலை மாதங்களில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 147 டாலர் என்ற அளவிற்கு இருந்தது. அப்போதும் இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ. 73 என்ற அளவில்தான் இருந்தது.
ஆனால், மோடி அரசுக்கு பிறகு ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை வெறும் 26 ரூபாய் 65 காசுகள் என்ற நிலையில், சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோலை 73 ரூபாய்க்கு விற்றது. கச்சா எண்ணெய் விலை 37 டாலராக குறைந்த போதும், பெட்ரோல் விலை ரூ. 73ஆகவே உள்ளது.
தற்போது நிதி தேவைக்காகக் கச்சா எண்ணெய் உற்பத்தியை வளைகுடா நாடுகள் குறைக்கத் துவங்கியுள்ளன. இதனால் தற்போது ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 65.54 டாலர் வரை உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் (OPEC) மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளதால், சந்தையில் செயற்கையாகத் தட்டுப்பாட்டை உருவாக்கி அதன் மூலம் கச்சா எண்ணெய் விலையில் உயர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்கும் இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.