டெங்குவை கட்டுப்படுத்த பயன்படும் கொசுக்களின் காதல்
By SAM ASIR
டெங்கு காய்ச்சல் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) வகையின் பெண் கொசுக்கள் மூலமாக பரவுகிறது. இந்த கொசுக்கள் கடிக்கும்போது, டெங்கு (dengue) காய்ச்சல் வைரஸ் மனிதர்கள் பாதிக்கிறது.
ஃபிஜி தீவு, டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகக்கூடிய பகுதி. ஸிகா, சிக்குன்குன்யா மற்றும் டெங்கு பாதிப்புகளை குறைப்பதற்காக ஃபிஜியில் வித்தியாசமான ஒரு முயற்சி எடுக்கப்படுகிறது. உலக கொசு இயக்கத்தின் சார்பில் 7 மில்லியன் ஃபிஜி டாலர் (ஏறத்தாழ 20 கோடி ரூபாய்) செலவில் ஃபிஜி, வானுவட்டு மற்றும் கிரிபாடி ஆகிய பகுதிகளில் கொசு கட்டுப்பாட்டு செயல்பாடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
வோல்பாச்சியா (Wolbachia) என்பது நன்மை செய்யும் நுண்ணுயிரி (பாக்டீரியா) ஆகும். இது ஏடிஸ் வகை கொசுக்கள், டெங்கு வைரஸை மனிதர்களுக்குப் பரப்புவதை இயற்கையானவிதத்தில் தடுக்கக்கூடியது. டெங்கு பாதிப்பு இருக்கக்கூடிய பகுதிகளில் வோல்பாச்சியா நுண்ணுயிரியுள்ள ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசுக்கள் பறக்கவிடப்படும். அவை, அங்கு ஏற்கனவே உள்ள இவ்வகை கொசுக்களுடன் உறவு கொள்ளும்போது, புதிதாக பிறக்கும் கொசுக்களுக்குள் வோல்பாச்சியா நுண்ணுயிரி தங்கியிருக்கும். அதன் பின் ஏடிஸ் கொசுவால் டெங்கு வைரஸ் பரவுவது மட்டுப்படும்.
ஒருமுறை இவ்வகையில் வோல்பாச்சியா பரவ விடப்பட்டால், ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் குறிப்பிட்ட பகுதி டெங்குவிலிருந்து பாதுகாக்கப்படும் என்று தெரிகிறது.
ஃபிஜியில் குயின் சாலையில் லாமி முதல் நாசோரி பகுதி வரையில் போல்பாச்சியா உள்ள ஏடிஸ் கொசு விடப்பட உள்ளது. டெங்கு ஒழிப்பில் இம்முயற்சி உடனடியாக பலனளிக்காவிட்டாலும், காலப்போக்கில் டெங்குவை குறிப்பிடத்தக்க வகையில் கட்டுப்படுத்திவிடும்.