ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை.. மருத்துவர் வெங்கட்ராமனின் விளக்கம்!
அப்போலோ மருத்துவமனையின் நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவர் வெங்கட்ராமன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக எனது கருத்தை (செகன்ட் ஒப்பினியனுக்காக) அறியும் வகையில் மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால் கேட்டு கொண்டதன் பேரில் ஜெயலலிதா மருத்துவ சிகி்ச்சை குறித்து ஆய்வு செய்ததாக வெங்கட்ராமன் தெரிவித்தார்.
அத்துடன், “அன்றைய தினம் ஆய்வில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் சிகிச்சை சரியாகத்தான் இருந்தது. அதன்பின் தன்னை அழைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆணைய வழக்கறிஞர் பார்த்தசாரதி அபோலோ மருத்துவ ஆவணங்களை காட்டி விசாரித்தபோது, வெங்கட்ராமன் “குறிப்பாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்பு ஜெயலலிதாவுக்கு சர்க்கரை குறையவில்லை என்று பதிலளித்துள்ளார்.
மேலும், “சர்க்கரையின் அளவு ஏற்றமும், இறக்கமுமாக இருந்துள்ளது” என்றும். ”இதற்காக அதிகபட்ச மாத்திரைகள் கொடுக்கப்பட்டும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை. ஆகவே நரம்பு வழியாக இன்சுலின் தொடர்ந்து செலுத்தப்பட்டதாக”வும் கூறினார்.
இவ்வாறு செய்தும், சர்க்கரை அளவு குறையவில்லை என்ற அறிக்கை விபரங்களை காட்டி விளக்கம் கேட்டபோது, அதனை சரிதான் என வெங்கட்ராமன் ஒப்புக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால் ஆணையத்தில் அளித்த சாட்சியத்தில், “ஜெயலலிதாவுக்கு இனிப்புகள், தவிர்க்கப்பட வேண்டிய பழங்கள் இவைகளை சாப்பிட்டது தொடர்பாக கேட்ட போது, 1200 கலோரிக்குள் இருந்து விட்டால் பிரச்சினை இல்லை என சாட்சியம் அளித்து உள்ளாரே” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த வெங்கட்ராமன், “ஜெயலலிதாவுக்கு இனிப்பு, பழங்கள் கொடுத்தது தனக்கு தெரியாது என்றார். மேலும், 1200 கலோரிக்கு இனிப்பு மட்டும் கொடுக்க கூடாது என்றும், அப்படி கொடுத்திருந்தால் அது தவறு எனவும் கூறிய அவல், அப்படி கொடுத்திருந்தால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியாது.” என்றும் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெ.யலலிதாவுக்கு சர்க்கரை கட்டுக்குள் அடங்காமல் இருந்ததற்கு காரணம் என்ன வழக்கறிஞர்கள் கேட்டதற்கு, ஜெயலலிதாவுக்கு இருந்த வியாதிகள் மற்றும் தொற்று ஆகியவைதான் காரணம் எனவும் மற்ற சில காரணிகளும் இதற்கு காரணம் என வாக்குமூலம் அளித்துள்ளார்.