பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் சொத்து, ஓட்டுநர் உரிமம் வாங்கலாம்!
பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாவில் நீண்டநாள் தங்கியிருக்கும் விசா (LTV) வழங்கப்படுகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலை அனுபவிப்பதன் காரணமாக இந்தியாவுக்கு வரும் சிறுபான்மை சமுதாயத்திற்கு உதவும்படியாக நீண்டநாள் விசா தரப்படுகிறது.
2011 - 2014 காலகட்டத்தில் உரிய விண்ணப்பங்களை சமர்ப்பித்த 14,726 பாகிஸ்தானியர்களுக்கு இவ்விசா கொடுக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு 2,142 பாகிஸ்தானியருக்கும், 2016-ம் ஆண்டு 2,298 பேருக்கும், 2017-ம் ஆண்டு 4,712 பேருக்கும், இந்த ஆண்டு இதுவரைக்கும் 6,902 பேருக்கும் இந்தியாவில் நீண்டநாள் தங்கியிருக்கக்கூடிய விசா அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 30,000 பாகிஸ்தானியர் இதுவரை இந்த விசாவினை பெற்றுள்ளனர்.
தற்போதைய மத்திய அரசின் கொள்கை முடிவின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் நீண்டநாள் விசாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமண சமயத்தவர், பார்ஸிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சொந்த உபயோகத்திற்காக, ஒரு குடும்பம் தங்கியிருக்கத் தேவையான, சுயதொழில் செய்ய தேவையான இடத்தினை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் தங்கியிருக்கும் இந்திய மாநிலத்திற்குள் சுயவேலைவாய்ப்புக்காக, வர்த்தகம் செய்ய பயணம் செய்ய இவர்களுக்கு அனுமதி உண்டு. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு இந்த விசாவை மாற்றிக்கொள்ள முடியும்.
நீண்டநாள் இந்திய விசா பெற்ற இந்த பாகிஸ்தானியர்கள், சொத்து வாங்குவதுடன் ஆதார் மற்றும் பான் கார்டுகளையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இராணுவ முகாம் என்ற கண்டோன்மெண்ட் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட இடங்களில் அசையா சொத்துக்களை வாங்க இயலாது.
தற்போது மேலும் 1,500 விண்ணப்பங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.