ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சருக்கு 3 ஆண்டு சிறை!
நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் பாஜக முதல்வர் மதுகோடாவுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், 25 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2008 வரை முதல்வர் பதவியில் இருந்தார். அப்போது, ஜார்க்கண்ட்டின் ராஜரா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தை, மதுகோடா தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி, தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது.
மதுகோடா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் எச்.சி.குப்தா, ஜார்க்கண்ட் முன்னாள் தலைமைச் செயலர் ஏ.கே. பாசு, நிலக்கரித் துறை செயலர் ஹரிஷ் சந்திரா உள்ளிட்ட 15 பேர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகினர்.
இதில் 10 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் உள்ளிட்ட 4 பேரை வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி பரத் பராஷர், அதேநேரம் ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்ட 6 பேருக்கு உள்ள தொடர்பு சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது என கடந்த டிசம்பர் 13ஆம் தேதி தெரிவித்தார். தண்டனை விவரங்கள் அறிவிப்பை நீதிபதி ஒத்தி வைத்தார்.
டிசம்பர் 14-ஆம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “தனக்கு சிறு வயதில் இரு மகள்கள் இருப்பதுடன், உடல்நலப் பிரச்சனையும் இருப்பதால் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும்” என மதுகோடா தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அவற்றை பதிவு செய்துகொண்ட நீதிபதி, தண்டனை அறிவிப்பை டிசம்பர் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று இவ்வழக்கில் தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி பராஷர், மதுகோடாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 25 லட்சம் ரூபாய் அபராதமும், எச்.சி. குப்தாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
ஜார்கண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ஏ.கே. பாசு, மதுகோடாவின் உதவியாளர் விஜய் ஜோஷி ஆகியோருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி பராஷர், வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.