டெல்லி அருகே சரிந்த அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம்- மூவர் பலி
டெல்லி அருகே உள்ள பெரும் நொய்டாவில் ஆறு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இதுவரையில் மூவர் பலியாகி உள்ளனர்.
இடிந்து விழுந்துள்ள கட்டடத்தில் 18 குடும்பங்கள் வசித்து வந்ததாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து நடந்ததையடுத்து கட்டட முதலாளி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 8:30 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்ததை அடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உத்தர பிரதேச போலீஸ் 800 பேர் அங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து இடிபாடுகளை விளக்கி, உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியை செய்து வருகின்றனர். அதே நேரத்தில், போலீஸ் இடிந்து விழுந்த கட்டடத்திற்குள் யாரும் வராத வண்ணம் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். இதுவரை 3 பேரின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உள்ளே குழந்தைகள் இருக்கலாம் என்று சந்தேகப்படுவதால், சம்பவம் குறித்த பதற்றம் அதிகரித்துள்ளது.
விபத்து குறித்த புகாருக்குப் பின்னர் போலீஸார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மோப்ப நாய், உணரிகள், கேமராக்கள் உள்ளிட்டவையை வைத்து இடிபாடுகளில் யாரும் சிக்கியிருக்கிறார்களா என்று தொடர்ந்து தேடி வருகின்றனர்.