கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்- இழுபறிக்குப் பின்னர் அனுமதி
தமிழக அரசின் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில், 150 எம்எல்டி அளவு கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நெம்மிலியில் செயல்படுத்த தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக முயன்று வருகிறது. பெருகி வரும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
1259.38 கோடி ரூபாயில் இந்தத் திட்டத்திற்கு செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. இந்தத் தொகையை ஜெர்மன் நிறுவனமான கே.எஃப்.டபள்யூ மற்றும் தமிழக அரசு கூட்டாக இணைந்து செலவிட முடிவு செய்தன. மேலும், இது தொடர்பான டெண்டரும் நவம்பர் 10, 2016 ஆம் ஆண்டு முதன் முதலாக தமிழக அரசால் கோரப்பட்டது. தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி வரை டெண்டர் நீட்டிக்கப்பட்டது.
பின்னர், செப்டம்பர் 9 ஆம் தேதி வரையிலும், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலும் டெண்டர் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 28 ஆம் தேதி ராஞ்சியைச் சேர்ந்த சிங் எலக்ட்ரிக்கலஸ் மற்றும் கட்டுமான நிறுவனம், டெண்டருக்கான ஆவணங்களை வாங்கியது. இரண்டு நாட்களுக்குள் டெண்டருக்கான ஏலத் தொகை குறித்து சமர்பிக்க முடியாததால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது அந்த தனியார் நிறுவனம்.
இது தொடர்பான விசாரணை வந்த போது உயர் நீதிமன்றத்தில், ‘சிங் எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் கட்டுமான நிறுவனத்துக்கு டெண்டர் குறித்து அக்கறை இருந்திருந்தால், முன்னரே அதற்கான ஆவணங்களை பூர்த்தி செய்து தந்திருக்க வேண்டும். ஆகையால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். மேலும், தமிழக அரசு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த எந்தத் தடையும் இல்லை’ என்று உத்தரவிட்டது.