மேட்டூர் அணை திறப்பு... நொடிக்கு 2000 கன அடி நீர் வெளியேற்றம்
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இதனால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் காரணமாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது இதேபோல், மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வந்துக் கொண்டிருக்கிறது. இதனால் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது.
இந்நிலையில், இன்று காலை 10.35 மணியளவில் 85வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார்.
முதற்கட்டமாக, 2000 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இது, பின்னர், 20 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறந்து விடப்படும் என கூறப்பட்டுள்ளது. பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.