நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு வேண்டும்- ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் பாஜக-வுக்கு எதிராக அதிமுக வாக்களிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் மத்திய அரசு ஒன்றின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் முதன்முறையாக நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாஜக-வுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. அதற்கு தனியாக 273 சீட்கள் இருக்கின்றன. இது பாதியளவை விட மிக அதிகம். ஆனால், பாஜக-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளால் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வரும் வெள்ளிக் கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக எம்.பி-க்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக-வுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக மக்களின் உணர்வுகளை அவமதித்ததோடு சட்டமன்றத்தின் தீர்மானங்களைத் தூக்கியெறிந்து, மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டிருக்கும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை மக்களவையில் அதிமுக ஆதரித்து வாக்களிக்க வேண்டும்"  எனக் குறிப்பிட்டுள்ளார்.

More News >>