அமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நொறுங்கின - டெல்லி இளம்பெண் பலி
அமெரிக்கா ஃப்ளோரிடாவில் இரண்டு பயிற்சி விமானங்கள் மோதி நொறுங்கிய விபத்தில் இளம் விமானியான டெல்லி பெண் உள்பட நால்வர் பலியாகினர்.
அமெரிக்காவின் டீன் சர்வதேச விமான பயிற்சி நிலையத்திற்குச் சொந்தமான பைப்பர் பிஏ-34 மற்றும் செஸ்னா 172 வகை விமானங்கள் ஜூலை 17 செவ்வாயன்று ஃப்ளோரிடோவில் மியாமி அருகே எவர்கிளட்ஸ் என்ற இடத்தில் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாயின.
இதில் இந்தியப் பெண்ணான நிஷா செஜ்வால் (வயது 19), ஜோர்ஜ் சான்செஸ் (வயது 22), ரால்ப் நைட் (வயது 72) மற்றும் கார்லோஸ் ஆல்ஃபிரிடோ ஸானெட்டி ஸ்கார்படி (வயது 22) ஆகியோர் பலியாகினர்.
நிஷா செஜ்வால், டெல்லி, யூசுப் சாரையிலுள்ள டிஏவி மாதிரி பள்ளி, சாகெட்டில் உள்ள அமிட்டி சர்வதேச பள்ளி ஆகியவற்றில் படித்தவர். கடந்த செப்டம்பர் முதல் இந்த நிறுவனத்தில் அவர் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
பைப்பர் பிஏ-34 ரக விமானத்தில் தேர்வாளர் ரால்ப் நைட் உடன் வணிக விமானிக்கான உரிமம் பெறுவதற்கான தேர்வுக்காக பறந்து சென்றபோது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. நிஷா செஜ்வால் இதுவரை 250 மணி நேரத்திற்குமேல் விமானத்தில் பறந்த அனுபவம் உடையவர்.
டீன் பயிற்சி நிலைய விமானங்கள் 2007 முதல் 2017 வரை இருபதுக்கும் மேற்பட்ட முறை விபத்தில் சிக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.