ஹெச்-1பி உள்ளிட்ட அமெரிக்க இந்தியர் பிரச்னை - மத்திய அமைச்சர் கருத்து

ஹெச்-1 பி விசா மற்றும் இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் நகர்வு உள்ளிட்ட விஷயங்களில் இந்திய அரசு, அமெரிக்காவோடு நெருக்கமாக செயல்பட்டு வருகிறது என்று இந்திய வெளியுறவு துறை இணையமைச்சர் வி.கே.சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், "ஹெச்-1பி விசா கொள்கையில் அமெரிக்க அரசால் ஏதும் பெரிய மாற்றம் செய்யப்படுகிறதா என்று இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இரு தரப்பும் பயனடைந்து வருவதால் இது ஊக்குவிக்கப்பட வேண்டும். ஹெச்-1பி குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் 7 தனி நபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

நிர்வாக ரீதியாக கடந்த 2017 ஏப்ரல் 18-ஆம் தேதி, அமெரிக்க அதிபர் 'அமெரிக்க பொருட்களை வாங்குங்கள்; அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்' என்ற ஆணையை பிறப்பித்துள்ளார். ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் இது குறித்து வழங்கப்பட்டுள்ளன. இந்த செயல்பாடு இன்னும் நிறைவுபெறவில்லை. விசா தவறாத பயன்படுத்தப்படாமல் இருக்க அமெரிக்க நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று கூறியுள்ளார்.

அமெரிக்க கிரீன்கார்டு பற்றிய கேள்விக்கு, “கடந்த 2016 நிதியாண்டில் 64,687 இந்தியர்களுக்கு அமெரிக்காவில் கிரீன்கார்டு வழங்கப்பட்டுள்ளது. 2018 மே மாதம் அமெரிக்க குடியேறுதல் மற்றும் குடிபுகல் துறை வெளியிட்டுள்ள தகவல்படி, பணியின் அடிப்படையில் முன்னுரிமை பெறும் பிரிவில் 3,06,601 விண்ணப்பங்கள் இந்தியர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஏனைய பிரிவில் விண்ணப்பித்துள்ளோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரம் பொதுதகவலில் அளிக்கப்படவில்லை. வெளிநாட்டவருக்கு கிரீன்கார்டு முறையில் அமெரிக்கா பெரிய மாற்றங்கள் எதையும் செய்யவில்லை" என்றும் அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

More News >>