சபாஷ்..! இந்திய அணிக்கு இது சிறப்பான ஆண்டு...

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது.     டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸில் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்று நினைக்கும் அளவிற்கு இலங்கை அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. தரங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா வீசின 9-வது ஓவரில் தொடர்ந்து ஐந்து பௌண்டரிகளை விளாசினார். தரங்கா, சமரவிக்ரமா இருவரும் முதல் 22 ஓவருக்கு ஆடிய விதத்தை பார்க்கும்போது, இலங்கை அணி 350 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் ஷாகல் மற்றும் குல்தீப் யாதவின் சிறந்த பந்துவீச்சால் இலங்கையின் பேட்டிங், வரிசையாக சரியத் தொடங்கியது. இலங்கை அணியால் 45-வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி சார்பில் ஷாகல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். எளிதான இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில், ராஞ்சி போட்டியில் இரட்டை சதம் விளாசிய தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா இந்த முறை 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவானுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணி 23-வது ஓவரில் 149 ரன்கள் அடித்திருந்தபோது, 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். முதலில் நிதானமாக ஆடிய ஷிகர் தவான் பின்னர் இலங்கை பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறவிட்டார்.84 பந்துகளை சந்தித்து, 13 பௌண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி தனது 12-வது சதத்தை பதிவு செய்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முந்தைய போட்டியில் 68 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 33-வது ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது, அத்துடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதையும், மூன்று போட்டிகளில் 168 ரன்கள் விளாசிய ஷிகர் தவான் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றனர். ஷிகர் தவான் இந்த போட்டியில் தனது 4,000 ரன்களை கடந்துள்ளார், அதிவேகமாக 4,000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் வரிசையில் ஷிகர் தவான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் விராட் கோலி உள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர், ராஞ்சி போட்டியில் 88 ரன்கள் எடுத்திருந்தார், சர்வதேச கிரிக்கெட்டில் இவருக்கு இது மூன்றாவது போட்டியாகும், இப்போட்டியில் 65 ரன்கள் அடித்ததன் மூலம், மூன்று போட்டியில் இரண்டு அரை சதங்கள் அடித்து நல்ல பார்மில் உள்ளார். இந்திய அணிக்கு இது சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. மொத்தம் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில் 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது 75 சதவீதம் வெற்றி கண்டுள்ளது, இதற்கு முன் ஒரு வருடமும் இத்தனை சதவீத வெற்றியை இந்திய அணி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல், ஒருநாள் போட்டி தொடரை பொருத்தவரை, தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றி வரும் இந்திய அணி, அதிக தொடர்களை கைப்பற்றிய அணிகளின் வரிசையில், மேற்கிந்திய தீவு (14 தொடர்கள்) அணிக்கு அடுத்த இடத்தில், ஆஸ்திரேலிய அணியுடன் (8 தொடர்கள்) இரண்டாவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது. இன்னும் தென் ஆப்பிரிக்க தொடர் நமக்கு இருப்பதால் ஆஸ்திரேலிய அணியை மூன்றாவது இடத்துக்கு தள்ள வாய்ப்புள்ளது. அது நடக்கக் கூடிய காரியமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
More News >>