தொடங்கியது லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல்லை கொண்டு வந்து அவற்றின் விலையை குறைக்க வலியுறுத்துவது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் நாடு முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்தது. அத்துடன், இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, கோழிப்பண்ணையாளர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், “காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள், வேன்கள் ஓடாது. தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் கனரக வாகனங்களும், ஒன்றரை லட்சம் மினி வேன்களும் இயங்காது.
இந்த வேலைநிறுத்தத்தில் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் பங்கு பெறுவதாக அறிவித்து விட்டனர். மத்திய அரசு உடனடியாக எங்களை அழைத்து கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு காண வேண்டும். அதுவரை எங்களுடைய வேலைநிறுத்தம் தொடரும்” என்று தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா கூறியுள்ளார்.
இதன் காரணமாக, தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, கட்டுமான பொருட் கள், தீப்பெட்டி, மோட்டார் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை தேக்கம் அடைய தொடங்கி உள்ளன. இதேபோல் வடமாநிலங்களில் இருந்து வரும் பருப்பு வகைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவையும் தடைபட்டுள்ளன. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உருவாகி உள்ளது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்திற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும், 5000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.