நீட் தேர்வு கருணை மதிப்பெண்: உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிப்பெற்றால் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல் ஆகிவிட்டது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் என்கிற நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. தமிழகம் பொருத்தவரையில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்தது.
இதனால், அந்த கேள்விகளுக்கு சுமார் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம், தமிழில தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண் வழங்கும்படி சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டது.
மேலும், இந்த மதிப்பெண்களை கருத்தில் எடுத்துக் கொண்டு புதிய தரவரிசைப் பட்டியலையும் வெளியிட்டு மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட்ட உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.