மத்திய அரசுக்கு எதிராகப் பேசி வரும் அதிமுக எம்பி ஜெயவர்த்தன்!
மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்தான விவாதத்தின் போது அதிமுக எம்.பி. ஜெயவர்த்தன் மத்திய அரசு குறித்தும் தமிழகம் மீதான அதன் போக்கு குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் மத்திய அரசு ஒன்றின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் முதன்முறையாக நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாஜக-வுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. அதற்கு தனியாக 273 சீட்கள் இருக்கின்றன. இது பாதியளவை விட மிக அதிகம். ஆனால், பாஜக-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளால் எடுக்கப்பட்டு உள்ளது.
வாக்கெடுப்புக்கு முன்னர் தற்போது நடந்து வரும் விவாதத்தில் அதிமுக எம்.பி. ஜெயவர்த்தன் பேசுகையில், “மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்புகளை அதிமுக பதிவு செய்கிறது. சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவது மக்களின் விருப்பத்திற்கு எதிரானது.
நீட் தேர்வு தமிழக கிராமப்புற மாணவர்களை பாதிக்கும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை. தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கிறது தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான வரி பங்குத்தொகையை வழங்க வேண்டும்.
2015ஆம் ஆண்டு பேரிடர், வர்தா புயல் பாதிப்புகளுக்கு ஏற்ப தேவையான நிதி கிடைக்கவில்லை. ஜிஎஸ்டியால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண கச்சத்தீவை இலங்கை அரசிடம் இருந்து மீட்க வேண்டும்” எனத் தொடர்ந்து பேசி வருகிறார்.