நீட் தேர்வு... மாணவர்களுக்கு நீதி தேவை - ராமதாஸ் கோரிக்கை
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கான வினாத்தாள்களை தமிழில் மொழிபெயர்த்ததில் ஏற்பட்ட தவறுக்கு சி.பி.எஸ்.இ பொறுப்பேற்க முடியாது. தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் தவறுக்கு காரணம் என்பதால் கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருக்கிறார்.
மாணவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறை எதுவுமின்றி, மத்திய அமைச்சர் கூறியுள்ள இந்த பொறுப்பற்ற பதில் கண்டிக்கத்தக்கதாகும்.மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மிகவும் முக்கியமானது. தமிழகத்திலிருந்து இத்தேர்வை எழுதிய 1,14,602 மாணவர்களில் சுமார் 24,000 பேர் தமிழ் மொழியில் தேர்வு எழுதினார்கள். அவர்களுக்கான வினாத்தாள்களை மொழிபெயர்ப்பதில் சி.பி.எஸ்.இ. மிகவும் கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும்.
தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் தவறுதலாக மொழி பெயர்த்து விட்டனர் என்று மத்திய அரசு அதன் பொறுப்பை தட்டிக்கழித்து விட்டு, இந்த விவகாரத்தை எளிதாக கடந்து சென்றுவிட முடியாது. தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்த வினாத்தாள்களை சி.பி.எஸ்.இ சரிபார்த்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது சி.பி.எஸ்.இ தரப்பின் நியாயப்படுத்த முடியாத தவறாகும்.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ, வினாத்தாள் மொழிபெயர்ப்புக்காக தமிழக அரசை சார்ந்திருந்ததே தவறு ஆகும். மத்திய அரசின் ஊடக மற்றும் ஊடகத் தொடர்பு நிறுவனங்கள் சென்னையில் ஏராளமாக உள்ளன. பிரதமர் உரைகள் மற்றும் மத்திய அரசின் செய்திக்குறிப்புகளை அந்த நிறுவனங்கள் தான் மொழிபெயர்க்கின்றன.
அவற்றின் மூலம் நீட் வினாத்தாளை பிழையின்றி மொழிபெயர்த்திருக்க முடியும். அவர்களையும் தாண்டி மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், சி.பி.எஸ்.இ-யின் தென் மண்டலத்தில் பணியாற்றும் அதிகாரிகளும் மிகத்திறமையாக மொழிபெயர்க்கக் கூடியவர்கள்தான்.
அவர்களைக் கொண்டு மொழிபெயர்ப்பதை விடுத்து, தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்கள் தவறு செய்ததால், அதற்கான தண்டனையை தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பது இரக்கமற்ற கொடூரச் சிந்தனை.
இதே சர்ச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், ‘நீட் தேர்வில் 554 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு 196 கருணை மதிப்பெண்களை வழங்கினால், அவரின் மொத்த மதிப்பெண் 750 ஆக உயரும். நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்ணே 720தான் என்ற நிலையில், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு எப்படி கருணை மதிப்பெண்ணாக 196 தர முடியும்? இது குழப்பத்தை ஏற்படுத்தும்’ என்று கூறப்பட்டிருக்கிறது.
இது மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட குழப்பமே தவிர, தீர்ப்பில் உள்ள குழப்பம் அல்ல. தவறாக கேட்கப்பட்ட 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க என்பது தான் தீர்ப்பு. தமிழில் தேர்வெழுதிய ஒரு மாணவர் 600 மதிப்பெண்களை பெற்றுள்ளார் என்றால், சரியான வினாக்கள் அனைத்துக்கும் துல்லியமாக பதிலளித்ததுடன், தவறாக கேட்கப்பட்டவற்றில் 19 வினாக்களை சரியாக புரிந்து கொண்டு விடையளித்திருக்கிறார் என்று பொருள்.
அந்த மாணவருக்கு மீதமுள்ள 30 தவறான வினாக்களுக்கு மட்டும் 120 கருணை மதிப்பெண்கள் வழங்கினால் போதுமானது. இதில் எந்த குழப்பமும் இல்லை. இதைக் காரணம் காட்டி மாணவர்களுக்கு நீதியை தடுக்கக்கூடாது.
நீட் தேர்வு வினாக்கள் தமிழில் தவறாக கேட்கப்பட்டதற்கு மத்திய அரசு காரணமா, மாநில அரசு காரணமா? என்பது விவாதப் பொருள் அல்ல. வினாக்கள் தவறாக கேட்கப்பட்டனவா... இல்லையா? என்பது தான் விடை காணப்பட வேண்டிய வினா.
கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளன என்பதை சி.பி.எஸ்.இ ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அந்த வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்பது தான் சமூக நீதியும், இயற்கை நீதியுமாகும். தவறு யாருடையதாக இருந்தாலும் அதற்கு மாணவர்கள் பலிகடா ஆக்கப்படக்கூடாது.
எனவே, தமிழக மாணவர்கள் பக்கம் உள்ள நியாயத்தையும், உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் மதித்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதாக உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்து இந்தச் சிக்கலை சி.பி.எஸ்.இ முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.” என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.