ஜெயலலிதா புகழுக்கு களங்கம்... சசிகலா தரப்பு குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்வதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றம் சாட்டினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

விசாரணையின் போது, ஆணையம் தரப்பு மற்றும் சசிகலா தரப்பு வழக்கறிஞர்களிடையே காரசார வாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், "ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட்டில் தாசில்தாரை அழைத்து பத்திர பதிவு எதுவும் செய்தாரா, சிறுதாவூர் பங்களா மிரட்டி வாங்கப்பட்டதா என்ற கேள்விகளை எவ்வித ஆதாரம் இல்லாமல் பூங்குன்றனிடம் கேட்கப்பட்டுள்ளது" எனக் குற்றம் சாட்டினார்.

“ஜெயலலிதா விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் சாட்சியங்களிடம் கேட்கப்படும் கேள்விகள் உள்நோக்கத்துடன் இருப்பதாகவும், இது அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆணையம் விசாரணை மேற்கொள்வதாகவும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

“மேலும், ஆணையத்தில் ஆஜராகமாட்டேன் என துக்ளக் ஆசிரியர் கூறியிருப்பது ஏற்க கூடியது அல்ல" எனவும் அவர் கருத்து கூறினார்.

More News >>