சிலை கடத்தல்... சிறப்பு அமர்வு நியமனம்

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை நியமித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் சிலை கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் சிலை கடத்தல் சிறப்பு நீதிபதியாக அமர்த்தப்பட்டார். அதன்பிறகு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு குழுவினர் நியமிக்கப்பட்டனர்.

மேலும் நீதிபதி மகாதேவன் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களின் பாதுகாப்பு குறித்தும், அதன் சிலைகளின் எண்ணிக்கை மற்றும் அதனைப் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் நடவடிக்கைகள் எடுத்து வந்தார்.

இதனிடையே ஐஜி பொன்.மாணிக்கவேல் கொண்ட குழு கடத்தப்பட்ட சில சிலைகளை மீட்டு மீண்டும் தமிழக கோயில்களில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பல சிலைகள் மாயமானது, உற்சவர் சிலை மாற்றப்பட்டது குறித்து விசாரிக்கக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அறநிலையத்துறை ஆணையர் தரப்பு வழக்கறிஞர், மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இல்லாததால் ஏற்கனவே இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் வாதம் செய்தார்.

அப்போது பேசிய நீதிபதி மகாதேவன், சிலை கடத்தல் மற்றும் பழங்கால பொருட்கள் திருட்டு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க, தம்மையும், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வை நியமித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்த சிறப்பு அமர்வு வரும் 25-ஆம் தேதி முதல் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் எனவும் நீதிபதி மகாதேவன் கூறினார்.

More News >>