யார் சுயநலவாதி... கொந்தளிக்கும் சந்திரபாபு நாயுடு!

பிரதமர் எங்களைப் பார்த்து சுயநலவாதிகள் என்கிறார் ஆனால், உண்மையில் அவர்தான் சுயநலவாதி என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில் அவையில் இருந்த 451 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 325 பேரும், தீர்மானத்துக்கு ஆதரவாக 126 பேரும் வாக்களித்தனர். இதனால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

வாக்கெடுப்பிற்கு பிறகு சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆந்திரப் பிரதேசம் முழுவதும் நீதியை எதிர்பார்த்து காத்திருந்தது, ஆனால், எங்களுக்கு மீண்டும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. மத்திய அரசிடம் பெரும்பான்மை இருந்தாலும், அவர்கள் நீதியை நிலை நாட்டவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய பேச்சு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் எங்களைப் பார்த்து சுயநலவாதிகள் என்கிறார். ஆனால், உண்மையில் அவர்தான் சுயநலவாதி. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி கடந்த நான்கு ஆண்டுகளில் 29 முறை நான் டெல்லிக்கு சென்றுள்ளேன்.

ஆந்திராவிற்கு நீதி வழங்குவதற்கு பதிலாக அவர்கள் என் மீது குற்றம் சாட்டுகின்றனர். இந்த மோதலின் ஒருபகுதியாகவே நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தோம்.

நாட்டின் பிரதமர் பதவியில் இருப்பவர் பொறுப்பற்ற முறையில் பேசுவது சரியல்ல. எங்களிடம் போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு அலட்சிய போக்குடன் நடந்து கொள்கிறது.

மத்திய அரசு ஆந்திராவிற்கு செய்துள்ள துரோகங்களை பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்கப்போகிறேன். மத்திய அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும். அத்துடன், பாஜக-வை ஆதரிக்கும் கட்சிகளுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.” என்று கூறினார்.

More News >>