தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 52 பேர் பலி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
புதுடெல்லி: தமிழகத்தில், டெங்கு காய்ச்சலால் 52 பேர் உயிரிழந்ததாகவும், 22,197 பேர் பாதிக்கப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொசுக்களால் பரவுல் காய்ச்சல்களில், உயிர்கொல்லியாக இருப்பது டெங்கு. மழைக்காலம் தொடங்கியதும் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கின்றன. இதனால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது.
சுத்தமான தேங்கி நிற்கும் தண்ணீர்களில் தான் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான கொசு உருவாகிறது. இந்த கொசுக்களால், பொது மக்களிடையே டெங்கு காய்ச்சல் பரவியது. இதனால் பலரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு கொசுக்கள் மற்றும் சிறு பூச்சிகளால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உரியவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.அதன்படி, நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் 1,53,635 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இதில், 226 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக 22,197 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டும, 52 பேர் பலியாகியும் உள்ளனர். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தான் அதிகபட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் கேரளா உள்ளது. இங்கு, 19,776 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டும், 37 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.இதேபோல், சிக்குன்குனியா நோயால் நாடு முழுவதும் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 30,606 பேர் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 4 ஆயிரம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.