அமெரிக்காவில் மிசௌரி (Missouri)மாநிலத்தில் மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்தது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உள்பட 17 பேர் இந்த விபத்தில் பரிதாபமாக பலியானார்கள்.
மிசௌரியில் பிரண்சன் அருகே டேபிள் ராக் (Table Rock Lake) என்ற ஏரி உள்ளது. அங்கு படகு சவாரி நடைபெறுவது வழக்கம். கடந்த வியாழன் அன்று (ஜூலை 17-ம் தேதி) இரவு படகு ஒன்று 29 பயணியர் மற்றும் இரண்டு ஓட்டுநர்களுடன் ஏரியில் புறப்பட்டது.
அன்று மோசமான வானிலை காரணமாக இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசியது. அப்போது படகு தலைகீழாக கவிழ்ந்தது. அந்த இடத்தில் 80 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ளது. நீரில் மூழ்கியவர்களுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஒரு வயது பச்சிளங்குழந்தை முதல் எழுபது வயது முதியவர் வரை மொத்தம் பதினேழு பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
படகு ஓட்டுநர்களில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். விபத்தில் உயிர் தப்பியவர்களுள் ஒருவர், "படகில் கேப்டன், உயிர் காக்கும் மிதவை (life jackets) அணிந்து கொள்ள அவசியம் இல்லையென்று கூறினார். ஆகவே,நாங்கள் அதை போட்டுக்கொள்ளவில்லை," என்று தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான படகு நிறுவனமான ரிப்ளி எண்டர்டெயின்ட், நிகழ்வு குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.