அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு வசதி... சுகாதாரத்துறை தகவல்
அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு வசதிகளை ஏற்படுத்த 89 கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் தீ தடுப்பு வசதிகளை ஏற்படுத்தக் கோரியும், சாய்வு தள பாதை அமைக்கக் கோரியும் ஜவகர்லால் சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் இந்த வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, சுகாதாரத் துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட இக்குழு, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தியது. அதன் அடிப்படையில், சுகாதாரத் துறை செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 34 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவமனைகளில், தீ தடுப்பு வசதிகள் ஏற்படுத்த 89 கோடியே 58 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
19 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 16.30 கோடி ரூபாய் செலவில் சாய்வு தள வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், 27.36 கோடி ரூபாய் செலவில் ஜெனரேட்டர் அறைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது.
“1,877 மருத்துவமனைகள் தீ தடுப்பு உரிமம் பெற்றுள்ளது. 1,400 மருத்துவமனைகள் தீ தடுப்பு உரிமம் பெறவில்லை” என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல், தீவிபத்து ஏற்பட்டால் நோயாளிகளை அப்புறப்படுத்துவதற்கான திட்டம், 3, 808 மருத்துவமனைகளில் உள்ளதாகவும், 2023 மருத்துவமனைகளில் அதுபோன்ற திட்டம் ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் தகவல்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.