அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி திட்டம் அறிமுகம்
67 அரசு பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்கல்வி திட்டம் அறிமுகம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மாணவ- மாணவியர்களின் திறன்களை ஊக்குவிக்கவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மாற்றத்தின் ஒரு படியாக, 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பாடத்திட்டத்துடன் திறன் சார்ந்த கல்வியை போதிக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டு முதல், தொழிற்கல்வி திட்டம் அமல்படுத்தப்படும் என, சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு செய்யப்பட்ட 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு முதல், 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
ஏற்கனவே 11, 12-ஆம் வகுப்புகளுக்கு அமலில் உள்ள தொழிற்கல்வி திட்டமும் தொடரும் எனவும், அதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.