பொறியியல் படிப்பு... கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு, வரும் 25-ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
நடப்பாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர, 1.10 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஆன்லைன் வழியிலான கலந்தாய்வு, வரும் 25-ஆம் தேதி துவங்குகிறது.
கட்-ஆப் 190 மதிப்பெண்கள் முதல் 200 மதிப்பெண்கள் கொண்ட மாணவர்கள், ஜூலை 21 முதல் 24-ஆம் தேதி வரை, கலந்தாய்வுக்கான கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும் எனவும், விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்வது மற்றும் தேர்வு செய்யும் பணிகளை, வரும் 25 முதல், 29-ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
175 முதல் 189 வரை மதிப்பெண்களை கொண்ட மாணவர்கள், வரும் 25 முதல், 29 ம் தேதிக்குள் கட்டணங்களை செலுத்தி, வரும் 30 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளது.
150 மதிப்பெண் முதல், 174 மதிப்பெண் வரை கட்ஆப் மதிப்பெண் கொண்ட மாணவர்கள், வரும் 30-ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை கட்டணங்களை செலுத்தி, ஆகஸ்ட் 4 முதல், 8-ஆம் தேதி வரையிலான கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
125 முதல் 149 மதிப்பெண்கள் வரை எடுத்த மாணவர்கள், ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை கட்டணங்களை செலுத்த வேண்டும். பி்ன்னர், ஆகஸ்ட் 9 முதல், 13 வரை, விரும்பிய கல்லூரிகளை பதிவு செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இறுதியாக, 125 மதிப்பெண்களுக்கும் கீழே உள்ள மாணவர்கள்,ஆகஸ்ட் 9 முதல், 13ஆம் தேதி வரை கட்டணங்களை செலுத்தி, ஆகஸ்ட் 14 முதல், 19ஆம் தேதி வரையான கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்யூட்டர் வசதியில்லாத மாணவர்கள், அரசு அமைத்துள்ள 42 உதவி மையங்களுக்குச் சென்று, கட்டணங்களை செலுத்துவது, விரும்பிய கல்லூரிகளை பதிவு செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என , பொறியியல் சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார்.