மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்லவும்- வானிலை மையம்
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாகவே வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையும் அல்லது மிதமான மழையும் பெய்து வருகிறது. இன்றைய வானிலை செய்தி அறிக்கையை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மையம், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் கடலோர மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.