சென்னையில் தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து: இருவர் கைது

சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சாரம் இடிந்து விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் இருவர் பலியானதை அடுத்து, கட்டிட பொறியாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த பெருங்குடி கந்தன்சாவடி அருகே தனியார் மருத்துவமனையின் புதிய கட்டுமானப் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அப்போது, நேற்று சாரம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு (23) என்ற தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 33 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து மீட்பு குழுவினருடன் விரைந்த போலீசார் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. விபத்து குறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், கட்டுமான பணியை மேற்கொண்ட நிறுவனம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கட்டிட பொறியாளர்களான முருகேசன், சிலம்பரசன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>