பாஜக உடன் கருத்து வேறுபாடா? மோதலில் சிவசேனா

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமை மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், பாஜக-வின் கூட்டாளியான சிவசேனா அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, தீர்மானத்துக்கு முந்தைய நாள் பாஜக தலைவர் அமித்ஷா, உத்தவ் தாக்கரேவிடம் தனிப்பட்ட முறையில் ஆதரவு கோரியதால், கண்டிப்பாக அரசுக்கு ஆதரவாக சிவசேனா வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சிவசேனா, நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திலேயே கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது. இது அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும், சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா’-விலும் சமீபத்தில், ‘நாட்டை ஆள்பவர்கள் கொலைகாரர்கள். மிருகங்களைக் காப்பாற்றி மனிதர்களை கொல்பவர்கள்’ என்று கடுமையான விமர்சனத்தை வைத்தது.

மேலும், நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது ராகுல் காந்தி பேசிய விதம் குறித்தும் சிவசேனா புகழாரம் சூட்டியது. இதையடுத்து தான் மகாராஷ்டிரா பாஜக-வினர் இடத்தில் அமித்ஷா, ‘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும்’ எனக் கூறியாதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவசேனா, ‘2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்’ என அறிவித்துள்ளது.

More News >>