குஜராத்தில் 6வது முறையாக ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக

காந்திநகர்: குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில், பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிப்பெற்று பாஜக ஆறாவது முறையாக ஆட்சியை தக்க வைக்கிறது. இதனால், பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

குஜராத்தில் கடந்த 9ம் மற்றும் 14ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 68.41 சதவீதம் வாக்கு பதிவானது.

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

விறுவிறுப்பாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் நூலிழை வித்தியாசம் மட்டுமே இருந்து வந்தது. இதனால், யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு டிவியில் முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் எழுந்தது. காங்கிரஸ் மளமளவென தொகுதிகளை கைப்பற்றி வந்த நிலையில் சுமார் 10 மணியளவில் 182 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிந்தது. அப்போது, பாஜக 103 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. தொடர்ந்து காங்கிரஸ் 74 இடங்களில் முன்னிலையில் இருந்தது.

குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 இடங்கள் வேண்டும். இந்த இலக்கை பாஜக கடும் போட்டியுடன் தொட்டுள்ளது. இதன் மூலம், பாஜ குஜராத் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்து தக்க வைத்துள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் மூலம், 22 ஆண்டுகால ஆட்சியை பாஜக தக்க வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>