அமெரிக்காவில் கால் சென்டர் மோசடி - இந்திய வம்சாவளியினருக்கு 20 ஆண்டு சிறை
By SAM ASIR
பல்வேறு விதங்களில் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியினர் 21 பேருக்கு 4 முதல் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முதியோர் மற்றும் சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தோர் ஆகியோரை குறி வைத்து இந்த மோசடி நடந்துள்ளது. 2012 முதல் 2016 வரை நடைபெற்றுள்ள இந்த மோசடியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் ஏமாற்றப்பட்டுள்ளன.
இந்தியாவின் அஹமதாபாத் நகரிலிருந்து தொடர்பு கொண்டு அமெரிக்க வருவாய் துறை, குடியேறுதல் மற்றும் குடிபுகல் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் பேசுவதுபோல, மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பணத்தை அரசாங்கத்திற்குக் கட்டவேண்டும். இல்லையெனில் கைது, சிறைத்தண்டனை, நாட்டை விட்டு வெளியேற்றப்படுதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு இலக்காக நேரிடலாம் என்று மிரட்டி பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பணத்தை மதிப்பூட்டப்பட்ட வங்கி அட்டைகள் (stored value cards) மற்றும் இணையவழி பரிமாற்றம் மூலம் செலுத்துமாறு கூறி, அமெரிக்காவில் இருக்கும் நபர்கள் மூலம் அது பணமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 5 வாடிக்கையாளர் சேவை மையங்கள் (call centres) மற்றும் 32 நபர்களுக்கும் இந்த மோசடியில் பங்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தண்டனை விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க இந்தியர்களுள் பலர், தண்டனை காலம் முடிந்ததும் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.