குஜராத் மாநிலத்திலுள்ள அம்ரேலி என்ற இடத்தில் மூன்று சிங்கங்களிடமிருந்து பாவேஷ் பார்வாட் என்பவரை அவரது நாய் காப்பாற்றியுள்ளது. கையில் சிறுகாயங்களுடன் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
குஜராத்தில் ஆசிய சிங்கங்களுக்கான கிர் சரணாலயம் அமைந்துள்ளது. இந்தியாவில் இது மட்டுமே சிங்கங்களின் இயற்கை வாழிடம். 1,400 ச.கிமீ பரப்பளவில் அமைந்துள்ள இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வரும் மக்கள் மற்றும் கால்நடைகள் மீது சிங்கங்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றன.
அம்ரேலி, கிர் சரணாலயத்தை ஒட்டி அமைந்துள்ள கிராமம். கடந்த சனிக்கிழமை (ஜூலை 21) அன்று பாவேஷ் தனது மந்தையை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மூன்று சிங்கங்கள் அவரது மந்தையை தாக்கின. பாவேஷ், சிங்கங்களை விரட்ட முயன்றபோது, அவை அவரை தாக்கின.
எஜமானை சிங்கங்கள் தாக்குவதைக் கண்ட அவரது நாய் உரத்த சத்தத்தில் குரைத்தது. நாயின் தொடர் குரைப்பை கேட்ட கிராமவாசிகள் அங்கு திரண்டு வந்தனர். அதிக அளவில் மக்கள் வருவதை கண்ட சிங்கங்கள், பாவேஷை விட்டு விட்டு ஓடிவிட்டன. கையில் சிறு காயங்களோடு பாவேஷ் தப்பினார். உள்ளூர் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், மாங்குபென் மாக்வானா என்ற 32 வயது பெண்ணை பிரசவத்திற்காக ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். நள்ளிரவில் சிங்கங்கள் அந்த ஆம்புலன்ஸை மறித்துக் கொண்டன. 12 சிங்கங்கள் கொண்ட அந்தக் கூட்டத்தில் 3 ஆண் சிங்கங்கள் இருந்தன.
ஆம்புலன்ஸ் தொடர்ந்து செல்ல இயலாத நிலையில், 108 ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ சார்நிலை பணியாளர்கள், தைரியமாக சூழ்நிலையை கையாண்டனர். மாங்குபென்னுக்கு ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்தது. இதேபோன்ற சம்பவங்கள் குஜராத் கிராமங்களில் தொடர்கதையாகி வருகின்றன.