ரவாண்டா இந்தியர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி பெருமிதம்!

இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஆப்ரிக்காவின் ரவாண்டா நாட்டுக்குச் சென்றுள்ளார் பிரதமர் மோடி.

ரவாண்டா சென்றுள்ள மோடி அந்நாட்டு அதிபர் பவுல் காக்மேவுடன் இரு நாட்டு உறவு குறித்து கலந்துரையாடினார். பின்னர் மோடி, ரவாண்டாவில் இருக்கும் இந்தியர்கள் மத்தியில் பேசினார். ‘ரவாண்டாவில் இருக்கும் இந்தியர்களிடம் பேசுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ரவாண்டாவின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் அதிக அளவில் பங்களிப்பதாக அதிபர் காக்மே என்னிடம் தெரிவித்தார்.

சமூகம் சார்ந்தும் பல்வேறு சேவைகளில் இந்தியர்கள் ஈடுபடுவதாக சொன்னார். அதைக் கேட்கும் போது சந்தோஷமாக இருந்தது. உலகம் முழுக்க இருக்கும் இந்தியர்கள் தங்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்குகிறார்கள். இந்தியாவின் தூதர்களே அவர்கள்தான். பல ஆண்டுகளாக இங்கிருக்கும் இந்தியர்கள், நம் நாட்டின் சார்பில் ஒரு தூதரகம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டு வந்தனர்.

அது சீக்கிரமே நிறைவேற்றப்படும். சொந்த நாட்டுடன் மேலும் நெருக்கமாக நீங்கள் இருக்க அது உதவும்’ என்று உரையாற்றினார் மோடி. ரவாண்டாவுக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு அதிபர் காக்மேவுடன் பல்வேறு நிகழ்ச்சியில் மோடி இன்று கலந்து கொள்கிளார். குறிப்பாக, அங்குள்ள இனப்படுகொலை நினைவிடத்துக்குச் செல்ல உள்ளார் பிரதமர்.

 

More News >>