க்ரீஸ் நாட்டில் பயங்கர காட்டுத்தீ- 50க்கும் மேற்பட்டோர் பலி
க்ரீஸ் நாட்டின் தலைநகரில் பரவி வரும் மிகப்பெரும் காட்டுத்தீக்கு இதுவரையில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், 150-க்கும் மேற்ப்ட்டோர் காயமடைந்துள்ளநர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்தி என்ற இடத்தில் தான் இந்த காட்டுத் தீ படு பயங்கர சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தி, ஏதென்ஸ் நகரத்திலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலேயே இருக்கிறது. மக்கள் வாழும் பகுதிகளில் தீ வேகமாக பரவி வருவதால், எல்லோரும் கடற்கரை நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர். பல நூறு பேர், கடற்கரைக்குப் பக்கத்தில் சென்ற படகுகள் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர். பலர், எவ்வளவு முயன்றும் கடற்கரைக்கு வர முடியாமல் தீயில் கருகி இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்ட போதும் பல சிறுவர்கள் சிக்கிக் கொண்டதாக அதிர்ச்சித் தகவலும் கூறப்படுகிறது. இதில், 6 மாதக் குழந்தை ஒன்று புகை மாசு காரணமாக இறந்தது என்ற திடுக்கிடும் செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நமக்கு அவ்வளவாக பரிட்சியம் இல்லாத ஒரு விஷயத்தை நாம் சமாளிக்க முயன்று கொண்டிருக்கிறோம்’ என்று செய்வதறியாது பேசியுள்ளார் க்ரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ்.
மற்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து இந்த கோர விபத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவர் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து, ஸ்பெயின் மற்றும் சிப்ரஸ் நாடுகள் க்ரீஸுக்கு விமான மற்றும் தரைவழி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. அமெரிக்காவிடமிருந்து ஆளில்லா ட்ரோன் விமானத்தையும் க்ரீஸ் உதவிக்காக கேட்டுள்ளது. இந்தத் தீவிபத்தால் க்ரீஸ் நாட்டின் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.