கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை: 26ம் தேதி வரை மழை நீடிக்கும்
கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், வரும் 26ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், கேரளா மாநிலமே மூழ்கும் வகையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக, கோட்டயம், கோழிக்கோடு மாவட்டங்களின் வீடுகள் மழை வெள்ளத்தால் மூழ்கி கிடக்கின்றன. இதனால், இங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, நேற்று ஆலப்புழாவில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தம் 118 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பல மாவட்டங்களில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொது மக்கள் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டு, முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேரள அரசு செய்து வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் வரும் 26ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், கேரள மக்கள் மேலும் பீதியடைந்துள்ளனர்.