ஜப்பானில் வரலாறு காணாத வெப்பநிலை:அனல் காற்றுக்கு 65 பேர் பலி
ஜப்பானில் கடும் வெயிலை சமாளிக்க முடியாத நிலையில் அனல் காற்று வீசியதால் இதில் சிக்கி 65 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனால், அனல் காற்றை பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் மழையோ, வெளிலோ, நிலநடுக்கமோ.. எந்த ஒரு இயற்கை பேரிடராக இருந்தாலும் அந்நாட்டு மக்களை ஒரு வழியாக்கிவிட்டு தான் செல்கிறது.சமீபத்தில் தான், ஜப்பான் மக்களை வெளுத்து வாங்கியது மழை. இதில், ஏராளமான மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
மழை முடிந்து பெருமூச்சு விடுவதற்குள், அனல் பறக்கு வெயில் மக்களை வறுத்தெடுத்து வருகிறது. இங்கு, அதிகபட்சமாக குமகாயா என்ற இடத்தில் 106 டிகிரி வெயில் பதிவாகியது. ஜப்பான் வரலாற்றிலேயே இதுவே அதிகபட்ச வெப்பநிலை என்று கூறப்படுகிறது.
இந்த வானிலை வரும் ஆகஸ்டு மாதம் தொடக்கம் வரையில் அதிகபட்சமாக 95 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அனல் காற்றில் சிக்கி 65 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 22 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அதிகளவு தண்ணீர் பருக வேண்டும் என்றும் குளிர்ச்சித் தரும் உணவுப் பொருட்களை உண்ணவும், குளுகுளு வசதியை பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
இதைதவிர, 65 பேரின் உயிரை காவு வாங்கிய அனல் காற்றை தேசிய பேரிடராக ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.